ரஜினியின் டிவிட் அதிகாரத்திற்கு ஆதரவாக மட்டுமே - அமீர் காட்டம்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (14:44 IST)
அதிகாரத்திற்கு ஆதரவாக மட்டுமே ரஜினி குரல் கொடுக்கிறார் என இயக்குனர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார்.

 
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை வாலஜாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  
 
அப்போது அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது.   
 
அந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் சீமானின் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய அனைத்து அமைப்புகளின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய  இயக்குனர் அமீர் “ரஜினியின் டிவிட் அதிகாரத்திற்கு ஆதரவாக மட்டுமே பேசுகிறது. ஏழை மக்களுக்காக அது இறங்கி வருவதில்லை. திருச்சியில் உஷா மரணமடைந்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றவர்தான் ரஜினி. கடுமையான சட்டம் இயற்றவேண்டும் என அவர் கூறுவது மத்திய பாசிச ஆட்சியின் குரல். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் போலீசார் தாக்குதல் நடத்திய போது ரஜினி ஏன் பேசவில்லை” என கேள்வி எழுப்பினார். மேலும், ரஜினி போராட்டக்களத்திற்கு வந்தால்தான் போலீசாரின் அணுகுமுறை அவருக்கு தெரியும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்