விஜயகாந்த் நமக்குத் தேவையா ? – யோசிக்கும் எடப்பாடி !

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (10:15 IST)
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக தேவையா என்பது குறித்து இப்போது அதிமுக யோசிக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், சமுதாயக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் ஆகியவை எல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் இறங்கி தங்களுக்கான சீட்களைப் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் எந்தக் கட்சிகள் எங்கு போட்டியிடும் என்ற விவரம் இரண்டுக் கட்சிகளாலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தேமுதிக மட்டும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக் ஆகிய இரண்டுக் கட்சிகளோடும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்களின் ஒட்டுமொத்த பிம்பமும் டேமேஜ் ஆக ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆகியோரின் குற்றச்சாட்டுகள் நேற்று முழுவதும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பின.

இது ஒருபுறமிருக்க திமுக தன் கூட்டணி கதவுகளை முழுமையாக அடைத்துள்ள நிலையில் அதிமுக வைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கிறது தேமுதிக. ஆனால் கடந்த சில நாட்களாக தேமுதிகவை நம் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டுமா என எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக பாமக தரப்பில் கொடுக்கப்படும் அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது. தேமுதிக வின் சரிந்து வரும் வாக்கு வங்கியைக் காட்டி பாமக தலைமை அதிமுகவிற்கு அழுத்தம்  கொடுப்பதாகத் தெரிகிறது.

மேலும் அடிமட்டத் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்னும் சந்தேகம் உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் பாஜக மட்டும் தேமுதிகவை அணியில் கொண்டுவர வேண்டும் என இன்னமும் நினைத்து வருகிறது. அதனால் தேமுதிக விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி குழம்பி வருவதாகத் தெரிகிறது. ஒருவேளை தனியாகவோ அல்லது டிடிவி உடனோ நின்று விஜயகாந்த் ஓட்டுகளைப் பிரித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் தேமுதிக கூட்டணிக்குள் வந்தாலும் 3 சீட்டுகளுக்கு மேல் கொடுக்கவேண்டாம் என்ற முடிவில் அதிமுக உள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்