அமமுக டிடிவி தினகரன் பல்வேறு கட்சிகளுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த உள்ளாட்சி தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அதிமுக திறம்பட செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் முடிவு செய்யும் காலத்தில்தான் தேர்தல் நடைபெறும்.” என்று கூறினார்.
மேலும் அமமுக புகழேந்தி அதிமுகவில் இணைவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ”அமமுகவிலிருந்து பலரும் பிரிந்து பல கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தினகரனே வெவ்வேறு கட்சிகளுக்கு தூது அனுப்பி வருகிறார். அதிமுகவுக்கு தூது வந்தது.:” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்த இருக்கும் அனைத்து திட்டங்களுக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதால் எந்த திட்டத்தையும் சரியாக செயல்படுத்த முடிவதில்லை என்றும் தெரிவித்தார்.