நாங்குநேரி மற்றும் விக்கிரவண்டி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அதிமுகவே போட்டியிட்டுள்ளதாக தெரிகிறது.
நாங்குநேரி - விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1 ஆம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3 ஆம் தேதியும் கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுக - காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்காமல் இரண்டு இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளரயே நிறுத்த திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளை நம்பி நடந்து முடிந்த இரு தேர்தலில் பெரும் சறுக்கலை சந்தித்ததால் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23 ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வரும் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் தலைமை அலுவலகதில் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.