தேர்தல் அறிவிப்பால் பரபரப்பு : திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
சனி, 21 செப்டம்பர் 2019 (13:17 IST)
தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவில் பொதுக்குழுவின் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தொகுதியான நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வசந்தகுமார் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்று விட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நாங்குநேரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ இறந்துவிட்டப்படியால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளனர்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, நடைபெற இருந்த திமுகவில் பொதுக்குழுவின் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கபட்டதை அடுத்து பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.