4 இல்ல 3 தான்: செக் வைத்த அதிமுக: ஆப்ஷன் இல்லாமல் தவிக்கும் தேமுதிக

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (11:09 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேமுதிக - அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகாமல் இழுபறியில் உள்ளது. இந்த கூட்டணிக்காக பிரேமலதாவும், சுதிஷூம் செய்யும் செயல்களால் கேப்டன் அப்செட்டில் உள்ளாராம். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார், கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷூம் கவனித்து வருகின்றனர். இவர்கள் எடுக்கும் பல முடிவுகளால் தேமுதிக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர். 
 
அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டது தேமுதிக இதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்காததால், இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த திமுக அவர்களுடன் கூட்டணி குறித்து பேசியது. அதுவும் ஒத்துவராத நிலையில் திமுக, தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்து ஒதுங்கியது.  
 
இதன் பின்னரும் அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே பல நாட்களுக்கு நீடித்தது. கடைசியாக 4 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என அதிமுக கூறிவிட்டது. நேற்று மோடி தமிழகம் வந்த நிலையில் தேமுதிகவின் கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிட வேண்டும் என அதிமுக உறுதியாக இருந்தது. 
 
ஆனால், தேமுதிகவின் முக்கிய தலைகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துரைமுருகன், தேமுதிக தரப்பில் சுதீஷ் போன் செய்து, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவில் இணைய கேட்டதாகவும் அதற்கு எங்களிடம் சீட் இல்லை என கூறியதாகவும் வெளிப்படையாக கூறிவிட்டார். 
 
ஒரே நேரத்தில் தேமுதிக திமுகவுடனும் அதிமுக உடனும் டீல் பேசி வருகிறது என துரைமுருகன் வெளிப்படையாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. வேறு வழி இல்லாமல் சுதீஷும், துரைமுருகனிடம் பேசியதை ஒப்புக்கொண்டார்.
 
இத்தனை நாள் தேமுதிக நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்காவிட்டால் திமுக பக்கம் சென்றுவிடுவோம் என அதிமுகவை பிளாக்பெயில் செய்து வந்தது. ஆனால் தற்போது திமுக தேமுதிகவிற்கு இடமில்லை என கூறியது வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில்  தேமுதிகவிற்கு அதிமுக செக் வைத்துள்ளதாம்.
 
ஆம் இதுவரை 4 தொகுதிகள் கொடுக்கிறோம் என கூறி வந்த அதிமுக 3 தொகுதிகள் தான் ஒதுக்கமுடியும், இல்லையேல் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என கூறிவிட்டதாம். ஒரு பக்கம் தேமுதிகவின் பெயரும் கெட்டுபோய், கேட்ட தொகுதிகளும் கிடைக்காமல், இணைய கட்சிகளும் இல்லாமல் நிர்கதியாய் தவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்