வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (20:45 IST)
கரூரில் வாகன நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்சுக்கு ஜீப்பிலிருந்து இறங்கி வந்து நொடிப்பொழுதில் வழி ஏற்படுத்தி தந்த போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு.
 
கரூர் மாநகராட்சியில் பேருந்து நிலையம், ஜவகர் பஜார், கோவை சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆயுதபூஜை நாளான இன்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இரவு 9.00 மணியளவில் வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில், திடீரென்று கோவை செல்லும் சாலையில் ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் 108 ஆம்புலன்ஸ் திணறியது. அப்போது நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி திடீரென்று தனது ஜூப்பினை விட்டு இறங்கி ஓடி வந்து நொடிப்பொழுதில் போக்குவரத்து நெரிசலை சரி செய்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். 
 
விழாக்காலம் என்பதினால் வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளாலும், நாலாபுறமும் இருந்து வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஏற்கனவே பணியில் இருந்த இரண்டு போக்குவரத்து காவலர்களும், உதவி காவல் ஆய்வாளரும் சரி செய்ய முடியாமல் திணறிய நிலையில், உடனடியாக தனது ஜீப்பை விட்டு இறங்கி வந்து வாகன நெரிசலை சரி செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்