சென்னை மெட்ரோ பணிகளுக்காக தானியங்கி அரைக்கும் இயந்திரம்: ஒப்பந்தம் கையெழுத்து..!

Siva
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:32 IST)
சென்னை மெட்ரோ பணிகளுக்காக தானியங்கி அரைக்கும் இயந்திரம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், குறைந்தபட்சம் 8 Stones கொண்ட ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரத்தின் வடிவமைப்பு, உற்பத்தி வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை  M/s HARSCO RAIL LLC, USA நிறுவனத்திற்கு ரூ. 53.02 கோடி (வரிகள் உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம்(LOA) M/s HARSCO RAIL LLC, USA நிறுவனத்திற்கு 19.07.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது.

​இரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரங்கள், ரயில் பாதைகளின் மேற்பரப்பு குறைபாடுகளை நீக்கி, வடிவத்தை மீட்டெடுத்து, நெளிவை நீக்கி, ரயில் பாதைகளை பராமரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

​சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், HARSCO RAIL LLC, USA நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.சித்தார்த் சீனிவாசன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), தலைமைப் பாதை நிபுணர் திரு.காளிமுத்து, பொது ஆலோசகர்கள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

​ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரத்தை வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல், இயந்திரம் பணி தொடங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு இயந்திரத்தின் விரிவான பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரம் என்பது தண்டவாளங்களை பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வாகனமாகும். இந்த இயந்திரத்தின் முதன்மை செயல்பாடு, மெட்ரோ இரயில்களின் இயக்கத்தின் போது ஏற்படும் மேற்பரப்பு குறைபாடுகளை நீக்கி, பாதையின் வடிவியல் தரம், இரயில் சக்கர தொடர்பு, ஓட்டத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தவும், மெட்ரோ ரயில்களின் மிக உயர்ந்த இயக்கச் சுமைகளை குறைக்க, சத்தம் மற்றும் அதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இரயில் தண்டவாளங்களின் சேவை ஆயுள் 25% நீட்டிக்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்