தருமபுரியில் சிறை தண்டனையிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான ஒருவர் மர்மமான முறையில் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே உள்ள எம்.செட்டிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மாது. கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான். கடந்த 2009ல் மாதுவுக்கும், மற்றொருவருக்கும் தகறாரு ஏற்பட்டுள்ளது. அப்போது மாது வரை கொன்றதற்காக அவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
10 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த மாது சில நாட்கள் முன்னர்தான் விடுதலையாகி உள்ளார். பிறகு தன் குடும்பத்தோடு சகஜமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் மாது. சில நாட்கள் முன்பு அருகில் உள்ள ஊர் திருவிழாவிற்கு சென்ற மாது ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்கள் அவரது உடல்மேல் ஏறியதால் உடல் சிதறி போயிருந்திருக்கிறது. அந்த உடலை கைப்பற்றி போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரயில்கள் ஏறி உடல் சிதிலமடைந்ததால் சரியான காரணத்தை யூகிக்க முடியாமல் போலீஸார் குழம்பி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மாது குடித்துவிட்டு நிதானமில்லாமல் தண்டவாளத்தில் விழுந்தாரா? தற்கொலை முயற்சியா? அல்லது யாராவது முன்விரோதம் காரணமாக கொன்று தண்டவாளத்தில் வீசினார்களா என்று பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.