அத்திவரதரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் வைக்க வேண்டும் – கோர்ட்டில் கோரிக்கை

சனி, 17 ஆகஸ்ட் 2019 (13:41 IST)
அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளத்தின் தண்ணீர் சுத்தமானதாக இல்லை என உயர்நீதி மன்றத்தில் புகார் மனு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

40 வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதர் கடந்த 47 நாட்களாக மக்களுக்கு தரிசனம் கொடுத்து வந்திருக்கிறார். மீண்டும் அவரை அனந்தசரஸ் குளத்திற்குள் இன்று மாலை வைக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் பக்தர் ஒருவர் “அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதற்கு பதிலளிக்குமாறு இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது “அனந்தசரஸ் குளம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் தூர்வாரவில்லை? குளத்தில் நல்ல தண்ணீரை நிரப்ப என்ன செய்ய போகிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பினார்.

பொற்றாமரை குளத்தின் தண்ணீர் குடிக்கும் தரத்துடன் இருப்பதால் அதை கொண்டோ அல்லது ஆழ்துளை கிணறுகள் மூலமாகவோ குளத்தை நிரப்பலாம் என மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதிலளித்தது. மேலும் அத்திவரதரை வைக்கும் அறையில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பலாம் என முடிவெடுக்கப்பட்டது.

சமீபத்தில் ஏற்பட்ட மழையினால் இயற்கையாகவே அத்திவரதர் வைப்பறையில் தண்ணீர் ஊறுவதாக கூறப்பட்டது. இதுகுறித்த விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு மாசுகட்டுபாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 19ம் தேதி ஒத்தி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்