வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் கேள்விகள் - பெர்தோல் பிரெக்ட் [கவிதை]

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2015 (17:31 IST)
ஜெர்மானிய கவிஞரும், நாடக ஆசிரியருமான பெர்தோல்ட் பிரெக்ட் [ 1898 பிப்ரவரி 10 - 1956 ஆகஸ்ட் 14] இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார்.
 

 
பெர்தோல் பிரெக்டுக்கு 16 வயதிருக்கும்போது முதல் உலகப்போர் நடைபெற்றது. அது அவரது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. போரின்போது இறந்த அவரது வகுப்பு தோழர்களை ‘ராணுவம் விழுங்கிவிட்டதாக’ கருதினார்.
 
கடைசிவரை உழைப்பாளர்களின் சார்பாக தனது படைப்புகளை உருவாக்கிய மகத்தான கலைஞனின் மிகச்சிறந்த கவிதையான ’வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் கேள்விகள்’ கவிதை பின்வருமாறு:
 
வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் கேள்விகள் - பெர்தோல் பிரெக்ட்
 
தேப்ஸின் ஏழு வாயிகளைக் கட்டியது யார்,
அரசர்களின் பெயர்களை நீங்கள் புத்தகங்களில் வாசிப்பீர்கள்,
அரசர்களா மலைகளிலிருந்து கற்களைச் சுமந்து வந்தார்கள்?
 

 
பாபிலோன் பலமுறை இடித்து
நொறுக்கப்பட்டது
யார் அதை மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பியது?
 
பொன்னைப் போல் மின்னும் தங்களின்
வீடுகளைக் கட்டியவர்கள் வாழ்கிறார்களா?
 

 
சீனப் பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலையிலேயே
கட்டியவர்கள் சென்றுவிட்டார்களா?
 
மாபெரும் ரோமாபுரியில் நிறைந்துள்ள வெற்றிவளைவுகளை
கட்டியவர்கள் யார்?
 
சீசரின் வெற்றி யாரால் நிகழ்ந்தது?
 
பைசாண்டிய நகரம், எண்ணற்ற பாடல்களால்
மாளிகைவாசிகளால் மட்டுமா புகழப்பட்டது?
 
அட்லாண்டிஸ் கட்டுக்கதையில் கூட 
ஒரே இரவில் அட்லாண்டிஸ் கடலில் மூழ்கியது!
 
மூழ்கியவர்கள் இப்போதும் தங்கள் 
அடிமைகளுக்காக அழுகிறார்கள்.
 
இளைஞனான அலெக்சாண்டர்
இந்தியாவை வென்றது தனியாகவா?


 

கால்சை தோற்கடித்த சீசரோடு
அவனது படையில் ஒரு சமயற்காரன் கூட இல்லையா?
 
 
ஸ்பெயின் அரசன் தனது கப்பற்படை
மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டபோது அழுதானாம்
அழுதது அவன் மட்டும்தானா?
 
இரண்டாம் பிரெடிரிக் ஏழாண்டு போரை வென்றானாம்
அந்த வெற்றியில் வேறு யாரும் இல்லையா?
 
ஒவ்வொரு பக்கமும் வெற்றி
வெற்றியாளர்களுக்காக யார் விருந்து சமைத்தார்கள்?
 
ஒவ்வொரு பத்தாண்டிற்கும்
ஒரு சிறந்த மனிதன்
அதற்கு விலைகொடுத்தது யார்?
 
எண்ணற்ற குற்றச்சாட்டுகள்!.
என்ணற்ற கேள்விகள்!..
 
[ தமிழில்: ஜோசப் ராஜா ]