வாதம், வாய்வு, வாய்வு சம்பந்தப்பட்ட உடல்வலிகள் இவைகளுக்கு சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்துக் கடையல், குழம்பு, பொரியல் செய்து உண்டால் அந்த நோய்கள் குணமாகும்.
இக்கீரையை எந்தவிதமான நோய்களுக்கும் உணவாகக் கொடுக்கலாம். இதனை நாள்தோறும் தொடர்ந்து உண்டு வந்தாலும்கூட எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காது
நீர்க்கோர்வை, குளிர்சுரம், வாதசுரங்கள், கபசுரம், சளி இருமல் ஆகியவைகளை அரைக்கீரை போக்கும் குணமுடையது. இக் கீரை உடலுக்கு வெப்பத்தைத் தந்து சப்த தாதுக்களையும் வலுவடையச் செய்யும். இக்கீரை சுக்கில தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தைப் பெருக்குவதில் தூதுவளைக் கீரைக்கு நிகரானது.
உடலில் தேங்கும் வாய்வு, வாத நீர்களைப் போக்குவதில் முருங்கைக் கீரைக்கு சமமானது. நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.
அரைக்கீரை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னித் தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை பெருங்குணமளிக்க வல்லது.
மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் சேர்ந்த சேர்க்கையால் வரும் சூதக ஜன்னிக் கோளாறுகளை அரைக்கீரையுணவின் மூலம் குணமாக்கிக் கொள்ளலாம். தீயவழிகளில் உடல் சக்தியை இழந்தவர்களுக்கு இக்கீரை அரும் மருந்தாகவும், உற்றுழி உதவும் நண்பனாகவும் திகழ்கிறது.
அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது. மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும்.
தலைமுடி கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவிவர வேண்டும்.