ஆண்கள் மீது மட்டும் போக்சோ வழக்கு போடணும்னு யார் சொன்னது? பெண்களும் இதில் அடக்கம்! - உயர்நீதிமன்றம் அதிரடி!

Prasanth Karthick
புதன், 14 ஆகஸ்ட் 2024 (08:45 IST)

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் தொடுக்கப்படும் போக்சோ வழக்கானது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்காக இந்தியாவில் போக்சோ சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் உடனடி விசாரணை மற்றும் தண்டனை வழங்கி குழந்தைகளின் நலனை காக்க வழிவகை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் அதிகமாக போக்சோ வழக்குகள் பதிவாகின்றன. இதில் குற்றவாளிகளாக ஆண்கள் இருப்பது அதிகமாக உள்ளது.

 

சமீபத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அந்த பெண் வாதிட்ட நிலையில், அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி “இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாலியல் துன்புறுத்தல்,குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் வகையில் ஏதேனும் பொருள் அல்லது உடல் உறுப்ப உள்நுழைத்தல் ஆகியவற்றை குறிக்கிறது.

 

இதில் ஆண் என்று குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாலின பாகுபாடு கிடையாது என்பதையே போக்சோ சட்டத்தின் மூன்று மற்றும் ஐந்தாவது பிரிவுகள் குறிக்கின்றன. அப்படியிருக்க அது ‘ஆண்’ நபரை மட்டும்தான் குறிக்கிறது என ஏன் புரிந்துக் கொள்ளப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பி அந்த பெண்ணின் மேல்முறையீடை ரத்து செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்