மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (13:39 IST)
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடந்து வரும் கலவரத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் இழந்த நிலையில், தனது மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமைக்கு வருந்துவதாகவும், அதற்காக மக்கள் இடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் மணிப்பூர் மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். பல அன்புக்குரியவர்கள் உயிரை இழந்துள்ளார்கள் என்றும், பலர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் என்றும், இதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் நேற்று மன்னிப்பு கேட்ட நிலையில், இன்று அதிகாலை ஒரு மணிக்கு மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அதிகாலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் விடிய விடிய நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பெரிய அளவு சேதங்கள் ஏற்படவில்லை என்றும், சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதை போலீசாரே அணைத்ததாகவும் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் தாக்குதல் நடந்திருப்பதும், அதுவும் மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்