இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பெரில் மலையாள நடிகர் அலன்சியர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, மலையாள திரைப்பட துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது, மலையாள நடிகர் அலன்சியர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இளம்பெண் ஒருவர், செங்கமநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.