பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இதுபோன்ற பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு ஏதுவாக உள்ளக புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, மாநில மகளிர் ஆணையம் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அமைக்கப்படும் உள்ளக புகார் குழுவில், மாணவிகள் தரப்பில் ஒருவரும், பெண் பேராசிரியர் ஒருவரும், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவரும் இடம் பெறவேண்டும் என மாநில மகளிர் ஆணையம் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.