பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (17:13 IST)
கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம்  அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
 
பிறகு ஆனந்த ராஜ் என்ற நபருடன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட அந்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார். இதன் பிறகு, வேறு ஒரு சிறுமியை அழைத்துவந்தால் விட்டுவிடுவதாக இந்த மாணவியிடம் கூறவே, அவரும் மற்றொரு  13 வயது சிறுமியை அழைத்துவந்தார். பிறகு இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் கும்பலிடம் விற்கப்பட்டனர்.
 
இதற்குப் பிறகு கடத்தப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் காவல்துறையை நாடினர். காவல்துறை நடத்திய விசாரணையில் பாதிரியார் ஒருவரும்  சில அரசியல் பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததால், பல அமைப்புகள் கடலூரில் போராட்டத்தில் இறங்கின.
 
உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என சிறுமியின் உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இதனால், வழக்கை 2016 ஜூலையில் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதற்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பேர் மீது கடத்தல், சிறுமிகளை விற்பனை செய்தது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதில் இரண்டு பேர்  தலைமறைவாகிவிட்டதால், மீதமுள்ள 17 பேர் மீது வழக்கு நடந்துவந்தது. இந்த வழக்கை கடலூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
 
இந்த வழக்கில் கடந்த 4-ம் தேதியன்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பளித்தார். மகாலட்சுமி என்பவரைத் தவிர, மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என அவர் தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஜனவரி 7ஆம் தேதி அறிவிக்கப்படுமென நீதிபதி கூறியிருந்தார்.
 
அதன்படிஅவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. பாதிரியார் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஐந்தாண்டுகள் சிறை தண்டனையை  அனுபவிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.
 
ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அன்பு என்ற அன்பழகனுக்கு 3 ஆயுள்  தண்டனை விதிக்கப்பட்டது.
 
ஃபாத்திமா, ராதா, ராஜலட்சுமி ஆகிய மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட 16 பேரில் 8 பேர்  பெண்கள்.
 
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிகள் அரசு காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்