நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கேரளா அரசு வலியுறுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சூரல் மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில், மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்தது. அப்போது மத்திய அமைச்சரவை குழுவை சந்தித்து, நிவாரண பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கேரள அரசின் அமைச்சரவை குழு வலியுறுத்தி உள்ளது.