முத்தலாக் ஆண்-பெண் சமத்துவம் தொடர்பானது, ஆனால் சபரிமலை …– மோடி பதில்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (09:40 IST)
பிரதமர் மோடி ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் சபரிமலை விவகாரம் மற்றும் முத்தலாக் விவகாரம் ஆகியவைக் குறித்து பதிலளித்துள்ளார்.

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் இருந்து பலமான எதிர்ப்பு உருவாகியுள்ளது. சிறுபான்மையினரின் மத விவகாரத்தில் பாஜக அரசு தலையிடுகிறது எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் இதே பாஜக அரசு சபரிமலை விவகாரத்தில் பெண்கள் பக்கம் நிற்காமல் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறுவது பாஜக வின் இரட்டை நிலைப்பாடு மற்றும் முஸ்லிம் வெறுப்பைக் காட்டுகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி தற்போது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இது குறித்த கேள்விக்கு ‘ முத்தலாக் விவகாரத்தைப் பொறுத்தவரை, சில முஸ்லிம் நாடுகளில் கூட இது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் இது மதம் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லை. முத்தலாக் ஆண் - பெண் சமத்துவம் தொடர்பானது.  இந்த விவகாரத்தில் சட்டரீதியான தீர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.’  என்று பதிலளித்தார்.

ஆனால், சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் முடிவு குறித்த கேள்விக்கு ‘நமது நாட்டில் ஆண்கள் செல்லாத அல்லது செல்ல முடியாத கோயில்கள் எத்தனையோ உள்ளன. அது அந்தந்த கோயில்களின் மரபு சம்மந்தப்பட்டது. இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான பெண் நீதிபதி ‘இது கோயில் பாரம்பரியம் சார்ந்தது ’விளக்கியுள்ளார். அதுவே எங்கள் நிலைப்பாடும்’ எனக் கூறியுள்ளார்.

மோடியின் இந்த பதிலால் அவருக்குப் பல தரப்புகளில் இருந்து ஆதரவும் , எதிர்ப்பும் எழ ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்