ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினார் பாஜகவின் மேனகா காந்தி: போராட்டக்காரர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (11:23 IST)
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதனையடுத்து ஒருசில இடங்களில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


 
 
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் பொதுமக்கள் இந்த அவசர சட்டம் தேவையில்லை. இது தற்காலிகமான ஒன்றே எங்களுக்கு நிரந்தர தீர்வாக நிரந்தர சட்டம் வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் போராடி வந்தனர்.
 
இதனையடுத்து இன்று போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சில இடங்களில் அடிதடி நடத்தியும் கலைத்து வருகின்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட பொதுமக்கள் தயாராக இல்லை. இந்த சட்டம் நிலையானது இல்லை, எப்போது வேண்டுமானாலும் இதற்கு தடை வாங்கிவிடுவார்கள் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள்.
 
இந்நிலையில் போராட்டக்காரர்கள் அஞ்சியது போல பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
 
பாஜக அமைச்சர் மேனகா காந்தியின் இந்த செயல் போராட்டக்காரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் செயல்பாடுகளில் ஒருவாரத்துக்கு தலையிட வேண்டாம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தது.
 
உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஒரு வாரத்துக்கு தலையிட மாட்டோம் என கூறியது. ஆனால் மத்திய அரசை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரே இதற்கு தடை வேண்டும் என மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்