பத்திரிகையாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித்ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அவருக்கான தண்டனை வரும் ஜனவரி 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என ஹரியாணா பஞ்ச்குலா நீதிமன்றம் கூறியுள்ளது.
ராம் ரஹீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் 2002ஆம் ஆண்டு ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்டார். 2003ஆம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.
1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.
இந்த வழக்கு பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை அம்பாலா நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குர்மீத் சிங் மீது புகார் தெரிவித்த இரு பெண்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த அம்பாலா நீதிமன்றம் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான வழக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று 2017 ஆகஸ்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வன்முறையை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹரியானா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.