இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்.. ஒரு பார்வை

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (16:49 IST)
இந்திய அரசியல் சட்ட தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் இதன் வரலாறை சற்று சுருக்கமாக காணலாம்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க போகிறது எனவும், இனி இந்தியாவை இந்தியர்களே ஆட்சி செய்வர் எனவும் சுதந்திரத்தை அருகாமையில் அழைத்து உட்காரவைக்க தயாராக இருந்த நாட்கள் அவை. அப்போது இந்தியாவிற்கென்றே பிரத்யேகமாக ஒரு அரசியல் சட்டம் உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வந்தது நேரு அரசு. அதற்கு முன்பே அதற்கான விவாதங்கள் தொடங்கினாலும், அப்போதிருந்த சூழல், அரசியல் சட்ட உருவாக்கத்தை நோக்கித் தள்ளியது.

சுதந்திரத்திற்கு முன்னதாகவே, அதாவது 1946 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சட்ட உருவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அரசியல் சட்ட நிர்ணய சபையில் 296 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த குழுவிலிருந்து  யோகேந்தரநாத் மண்டல் என்பவர் வெளியேறியதை தொடர்ந்து தான் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சேர்க்கப்பட்டார். இதன் பின்பு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி, அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதன் படி, பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட அரசியலமைப்பு சட்டவரைவு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவில், பி.ஆர்.அம்பேத்கர் உட்பட கோபால்சாமி ஐய்யங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ்ராவ், V.T.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் அக்குழுவில் உறுப்பினராக இடம்பெற்றனர்.

பின்பு 1948, பிப்ரவரி 1 ஆம் தேதி, அரசியலமைப்பு சட்ட வரைவு குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. பின்பு அரசியலமைப்பு சட்டம் முழு வடிவம் பெற்று 1949 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் (பின்னர் குடியரசு தலைவர்) இராஜேந்திர பிரசாத் கையொப்பம் இட்டார். பின்பு 1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் அதாவது ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 22 அத்தியாயங்களாக, 12 அட்டவணைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு நெறிமுறை கோட்பாடுகள், மாநில அரசுகள், நீதிமன்றத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல அரசியல் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகளாக, சம பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமய உரிமை, சிறுபான்மையினர் பட்டியலினத்தவரின் கல்வி உரிமைகள் ஆகியவைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் பன்மைத்துவத்தையும் கூட்டாட்சி தத்துவத்தையும் முன்வைக்கிறது.

1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்திய போது, டாக்டர் அம்பேத்கரின் உரை மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வுரையில் அவர், “சட்டம் எவ்வளவு சிறந்த சட்டமாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் மோசமாக இருந்தால் அந்த சட்டம் நன்மை பயக்காது. அதே போல் சட்டம் மோசமாக இருந்தாலும் ஆட்சியாளர் சிறப்பாக இருந்தால் அந்த சட்டம் நன்மையே பயக்கும்” என கூறியது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்