மகாராஷ்டிராவில் நான்கு நாட்களுக்கு முன்பு முதல்வராகப் பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகுகிறார்.
இதை தற்போது நடந்து வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிவித்தார். நாளை மாலை 5 மணிக்குள் சட்டமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்ட நிலையில் பட்னாவிஸ் பதவி விலகியுள்ளார்.
"நாங்கள் சிவசேனைக்காக நீண்ட காலம் காத்திருந்தோம் ஆனால் அவர்கள் பதலளிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனார்.
தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்கும் என சிவசேனை தெரிவித்திருந்தது.
தேர்தலில் பாஜக கூட்டணிக்குதான் அதிக இடங்கள் கிடைத்தன. தேர்தலில் 105 இடங்களை, அதாவது போட்டியிட்ட இடங்களில் 70 சதவீதத்தை பாஜக வென்றது. எனவே இது பாஜக ஆட்சியமைப்பதற்கான வாக்குதான்" என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"மாதோஷ்ரீயை (தாக்கரே வீடு) விட்டு வெளியில் கால் பதிக்காதவர்கள் காங்கிரசுடனும், தேசியவாத காங்கிரசுடனும் இணைந்து ஆட்சியமைக்க வீடு வீடாக சென்று கதவைத் தட்டுகிறார்கள்" என்றும் அவர் விமர்சித்தார்.
அஜித் பவார் பதவி விலகல்
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் சர்ச்சைக்குரிய முறையில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தந்ததுடன், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் துணை முதல்வராகவும் சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்ற அஜித் பவார் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி , சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு தருவது என்று முடிவு செய்த நிலையில், திடீரென இரவோடு இரவாக பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவார் துணை முதல்வர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். ஆனால், சரத் பவாரும், அந்தக் கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவாரின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.
தேசியவாத காங்கிரஸ் அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்காத நிலையில், அந்தக் கட்சியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்து பாஜக அளித்த கடிதத்தை ஏற்று அதிகாலை நேரத்தில் மகாராஷ்டிரத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, ஆட்சியமைப்பதற்கு பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதற்கிடையே, இதனை எதிர்த்து சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று இன்று காலை உத்தரவிட்டது. இந்நிலையில்தான் அஜித் பவார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அஜித் பவார் ராஜிநாமா குறித்து கருத்து தெரிவித்த சிவசேனை கட்சியின் சஞ்செய் ராவத், "அஜித் பவார் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அவர் தற்போது எங்களுடன்தான் இருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கு உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர்" என தெரிவித்துள்ளார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
நேற்றுமாலை செய்தியாளர்களை சந்தித்த சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள், தேசியவாத காங்கிரசின் 54 எம்.எல்.ஏ.க்களில் 52 பேர் தங்களுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று பிற்பகல் 3.30க்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இதில் முக்கிய முடிவுகள் குறித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.