இந்தியா – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையேயான கலவரத்தால் மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா- சீனா இடையே சில காலமாக லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை ஏற்பட்டதன் அடிப்படையில் படைகள் பின்வாங்கிக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் நேற்று சீன படைகள் எல்லையில் திரும்ப சென்ற்போது இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் இந்திய வீரர்கள் மூவர் பலியாகி உள்ளதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சீனா தரப்பிலும் 5 வீரர்கள் இறந்துள்ளதாகவும், 14 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதே சமயம் கல்வான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்க அங்குள்ள இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராணுவ தளபதி முகுந்த்தின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.