2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறியது, அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து ஜெயகுமார் உட்பட சில அதிமுக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற விஜய் கூறியதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “விஜய் விமர்சனத்தை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. இங்கு மக்கள் தான் எஜமானர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை கணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும், 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர். கொள்கையில் நாங்கள் சரியாகத்தான் உள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சரியாக உள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செங்கோட்டையன் குறித்து பேசும்போது, “ஒரு கட்சியில் இருந்து சிலர் வெளியேறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஒரு தலைவர் சென்றால், அவர் பின்னாடி நான்கு பேர் செல்வதும் வழக்கமான ஒன்றுதான். அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,” என்று தெரிவித்தார். அதிமுகவில் எந்த பிரிவு இல்லை என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.