ஆண்டுக்கு இவ்வளவு கட்டினா போதும்.. சுங்கச்சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்! - மத்திய அரசு புதிய திட்டம்!

Prasanth Karthick
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (09:42 IST)

சுங்கச்சாவடிகளில் அதிகமான முறை பயணிக்கும் வாகனங்களின் வசதிக்காக ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பல சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். இப்படியாக நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள் தொடர்ந்து பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது குறித்து வாகன ஓட்டிகளிடையே புகார் உள்ளது.

 

இந்நிலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சுங்க கட்டண நடைமுறையில் புதிய முறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் ஆண்டு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இன்றி பயணிக்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளனர். மேலும் 15 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.30 ஆயிரம் செலுத்தும் சலுகையும் உள்ளதாம்.

 

தற்போது ஒரு சுங்கச்சாவடி வழியாக பயணிப்பவர்கள் மாத பாஸ் ரூ.340க்கும், ஆண்டு பாஸ் ரூ.4,080க்கும் செலுத்தி வரும் நிலையில் இந்த புதிய கட்டண முறை வருவதால் அவர்களுக்கு ரூ.1000 வரை மிச்சமாகும் என்பதால் இந்த திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்