சீனாவை சேர்ந்த ஏஐ தொழில்நுட்பம் டீப்சீக் மிகப்பெரிய அளவில் உலக அளவில் பிரபலமானது என்பதும், சாட் ஜிபிடியை ஒரே நாளில் வீழ்த்தி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில், டீப்சீக் மூலம் டேட்டாக்கள் கசிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த செயலியை பயன்படுத்த தென்கொரியாவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்கொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணுவ பிரிவு, பாதுகாப்பு துறைகளில் டீப்சீக் பயன்படுத்தக்கூடாது என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு காரணமாக, வெளியுறவுத்துறை மற்றும் தொழில்துறை உள்ளிட்ட அமைச்சகங்களில் பயன்பாட்டை முடக்கி உள்ளதாகவும், நிதித்துறை அமைச்சகமும் இந்த டீப்சீக் தொழில்நுட்பத்திற்கு தடை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இத்தாலி உட்பட சில நாடுகள் டீப்சீக் பயன்படுத்துவதை தடை விதித்துள்ள நிலையில், தற்போது அந்த பட்டியலில் தென்கொரியாவும் சேர்ந்துள்ளது.
உலகின் முன்னணி ஏஐ நிறுவனமான சாட் ஜிபிடியை, அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்டோரில் ஒரே நாளில் டீப்சீக் பின்னுக்கு தள்ளி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சில நாடுகள் அந்த செயலிக்கு தொடர்ந்து தடை விதிப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.