2 பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை தலாக் செய்த கணவர்.. போலீஸார் வழக்கு

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (13:29 IST)
பீகாரில் 2 பெண் குழந்தைகள் பெற்ற மனைவிக்கு தலாக் செய்த கணவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

முத்தலாக் தடை மசோதா சட்டம் கடந்த 1 ஆம் தேதி மாநிலங்கவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு பல எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த பர்சானா என்பவருக்கு அவரது கணவர் தலாக் செய்துள்ளார். பர்சானா மற்றும் இக்ராமுல் தம்பதியருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில நாட்களிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதன் பிறகு மீண்டும் பர்சானா கர்ப்பம் அடைந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் அழகான இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால் இக்ராமுல் பெண் குழந்தையை விரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு இக்ராமுல் பர்சானாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெண் குழந்தைகளை பெற்ற நீயும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டாம், நான் உன்னை தலாக் செய்யப் போகிறேன் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பர்சானா கணவரிடம் அழுது கெஞ்சி இருக்கிறார். ஆனால் அதற்கு இக்ராமுல் மனமிறங்கவில்லை.

தொலைப்பேசியிலேயே மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார். இதனால் இக்ராமுல் உறவினர்கள், பர்சானாவை அவரது கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதன் பின்பு, தனது இரட்டை குழந்தைகளையும் தூக்கிகொண்டு பர்சானா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது நிலைமையை கேட்டு பெற்றோர்கள் அதிர்ந்துள்ளனர்.

இதனையடுத்து பர்சானா அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் இக்ராமுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தபிறகு பீகார் மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்