விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது வெறும் வாய்பேச்சுமட்டும்தான்

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (18:32 IST)
வங்கிகளில் பொதுவாக வழங்கப்படும் கடன்களுடன் ஒப்பிடும் போது விவசாய கடன்களுக்கு வட்டி விகிதங்களும் குறைவு மற்றும் குறைவான முன்நிபந்தனைகளின் கீழ் வழங்கப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடன்கள் பெறுவதை எளிதாக்கும் வகையில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 4% வட்டி விகிதத்தில் விவசாய கடன்கள் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் தி வயர் செய்தி இணையதளம் ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் பாரத ரிசர்வ் வங்கியிடம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டது தொடர்பான தகவல்களை பெற்றுள்ளது. 

பதிலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிகாலங்களில் வழங்கப்பட்ட தொகை இடம்பெற்றுள்ளது.  பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வேளாண் உற்பத்தி மற்றும் வருவாயை பெருக்கும் வகையில் அத்துறைக்கு 2014-15-ல் ரூ. 8.5 லட்சம் கோடியை வழங்கியது. இதுவே 2018-19ல் 11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேளாண் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு இந்த கடன்கள் செல்கின்றன என்று விவசாயத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

2016-ம் ஆண்டுக்கு முன்பே விவசாயக் கடன்கள் என்ற பெயரில் பெருமளவு தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015-ம் ஆண்டில் 604 கணக்குகளுக்கு 52,143 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கணக்கிற்கு சராசரியாக ரூ. 86.33 கோடி சென்றுள்ளது. இதுவே 2014- ம் ஆண்டு ரூ 60,156 கோடி ரூபாய் 669 கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு கணக்கிற்கு ரூ. 91.28 கோடி சென்றுள்ளது. இதேமுறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. 

2013-ம் ஆண்டு 665 வங்கி கணக்குகளுக்கு ரூ. 56,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது, அப்போது ஒரு கணக்கிற்கு சராசரியாக ரூ. 84.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு 698 வங்கி கணக்குகளுக்கு ரூ. 55,504 கோடி செலுத்தப்பட்டுள்ளது, அப்போது ஒரு கணக்கிற்கு சராசரியாக ரூ. 79.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய கடன்கள் மூன்று துணைப்பிரிவுகளின்கீழ் வழங்கப்படுகின்றன, அதாவது விவசாய கடன், அடிப்படை விவசாய உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் என வழங்கப்படுகிறது. குடோன்கள், குளிர்சாதன கிடங்குகள் ஆகியவை அடித்தள உள்கட்டமைப்பு கீழ் வருகிறது. இதற்கு ரூ. 100 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. வேளாண் கிளினிக்குகள் மற்றும் வேளாண் வணிக மையங்களை அமைப்பது போன்ற ஆதரவு நடவடிக்கைகள் கீழ் வருகிறது, இவைகளுக்கு கடனுக்கான வரம்பு ரூ 100 கோடி ஆகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும்படி முன்னுரிமை துறை கடன் கொள்கையின்படி, வங்கிகள் மொத்தம் வழங்கும் கடனில் 18% விவசாயத்திற்கு வழங்க வேண்டும். 
 

“விவசாய தொழிலில் மிகப்பெரிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளது, அவைகளும் விவசாயக் கடன்களின் கீழ் கடன் வாங்கிக் கொள்கின்றன,”  பெரிய அளவு தொகையை பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கின்றன, இதன் விளைவாக விவசாயிகள் இந்த கடன்களைப் பெற முடியவில்லை.” என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தி இணையதளத்திற்கு விவசாயத்துறை நிபுணர் தேவேந்திர சர்மா பேட்டியளித்து பேசுகையில், விவசாயிகளின் பெயரில் பெரிய நிறுவனங்களுக்கு மலிவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. “விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது வெறும் வாய்பேச்சுமட்டும்தான்” ரூ .100 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ள இவர்கள் என்ன விதமான விவசாயிகள்? இது ஒரு நாடகம். விவசாயிகள் என்ற பெயரில் தொழில் நிறுவனங்களுக்கு ஏன் கடன் கொடுக்கப்படுகிறது? ” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

இதுபோன்ற செயல்முறைகளில் வங்கிகளும் பயனடைகிறது. எனவேதான் இதுபோன்று பெரிய அளவு தொகை கடனாக விவசாய பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. “இங்கு நிறுவனங்களுக்கு ரூ. 100 கோடி எளிதாக வழங்க முடியும். இதே தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றால், குறைந்தப்பட்சம் 200 பேர் தேவைப்படும். 18 சதவிதம் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றே வழங்குகிறது.” ‘விவசாயம்’ என்ற பெயரின் கீழ் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படக்கூடாது. நிதியமைச்சரிடம் இதுதொடர்பான ஆலோசனையை முன்வைத்துள்ளேன், ஆனால் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

மாநில வாரியாக தகவல்களை பெறுவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அனைத்து மண்டல கிளையிலும் ஆர்.டி.ஐ.யின் கேள்விகளை தாக்கல் செய்தோம். மும்பை மண்டலத்தை தவிர வேறு எந்த கிளைகளும் இந்த தகவலை வெளியிடவில்லை. மும்பை மண்டலத்தில் பணக்காரர்களுக்கான இடமாக அறியப்படும் இடத்தில் உள்ள மும்பை சிட்டி கிளையில் 3 கணக்குகளுக்கு ரூ. 29.95 கோடியை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. 

சராசரியாக ஒவ்வொரு கணக்குக்கும் ரூ. 10 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதே கிளையில் 9 கணக்குகளுக்கு ரூ. 27 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடன் தொகையை பெற்றவர்களின் தகவல்களை தெரிவிக்க வங்கி மறுத்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்