மகா கும்பமேளாவில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொள்ளாததை தொடர்ந்து, துறவிகள் கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா மிகச் சிறப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் அது நிறைவடைந்தது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் சுமார் 63 கோடி மக்கள் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில, கும்பமேளாவில் காங்கிரஸ் எம்பிக்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது. ஆனால், கடைசி வரை இருவரும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து, "கும்பமேளாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் என்ன?" என துறவிகள் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஒரு துறவி கூறியதாவது: "கங்கை தாயின் மடியில் அமர்ந்தால், காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வரும். அந்த அச்சம் காரணமாகவே அவர்கள் மகா கும்பமேளாவிற்கு வரவில்லை. தங்களது சொந்த குடும்ப பூமியாக இருந்த போதிலும், அதை அவர்கள் உதாசீனப்படுத்தி உள்ளனர். இந்த தலைவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள். உலக நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்த நிலையில், உள்ளூரில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் வராதது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.