காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பதை முடிவு செய்ய அக்கட்சியின் செயற்குழு ஆகஸ்ட் 10 ஆம் தேதி கூட இருக்கிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ஆனால் இன்னும் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், ஒரு வேளை ஏற்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பிரியங்கா காந்திக்கு வாய்ப்புள்ளதா? என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான நட்வர் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நட்வர் சிங், தலைவர் பதவி தொடர்பாக பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும் எனவும், மேலும் காங்கிரஸின் அடுத்த தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத வேறு யாராவது வர வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவிலிருந்து அவரது குடும்பம் பின்வாங்க வேண்டியதாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.