திமுக ஆட்சி அமைத்தது முதலாக பல மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வந்தாலும், திமுகவில் உள்ள சில பேரால் அவை மொத்தமாக காலியாகி கெட்டப்பெயர் உருவாகி விடுவது தொடர் கதையாக உள்ளது. அது திமுகவில் உள்ள அடிமட்ட தொண்டன் தொடங்கி அமைச்சர் வரை நீடிப்பதுதான் விந்தை.
அப்படியாக தனது பேச்சாலேயே சர்ச்சைகளை உருவாக்குபவராக இருக்கிறார் திமுக அமைச்சர் பொன்முடி. திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி போன்றோர் நாடாளுமன்றத்தில் தீரமாக மத்திய அரசை எதிர்த்து பேசும் வீடியோக்களை விட, பொன்முடி போன்றோரின் சர்ச்சை பேச்சு வேகமாக வைரலாகி விடுகிறது. பொன்முடி இப்போதுதான் இப்படி பேசுகிறாரா என்றால் அவருக்கும், சர்ச்சைக்கும் பல காலமாகவே தொடர்புள்ளது.
திமுக ஆட்சியமைத்து முதலில் கையெழுத்திட்ட திட்டம் மகளிர்க்கான இலவச பேருந்து பயணம். அதை ஒரு விழாவில் பேசியபோது பொன்முடி, “ஓசி பஸ்லதானே போறீங்க?” என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு தருணத்தில் பெண் திமுக பிரதிநிதி ஒருவரை சாதியை குறிப்பிட்டு பேசினார்.
அதேபோல ஒரு மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சிக்கு அவர் சென்றபோது, பெண் ஒருவர் தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சினை உள்ளதாக கூறினார். அப்போது அது தொடர்பாக அங்கு அமளி ஏற்பட்டதால் கடுப்பான பொன்முடி “எனக்கா ஓட்டு போட்டு கிழிச்சீங்க.. நீங்க வந்து கேக்குறீங்க. ஓட்டு போட்டவர்கள் போடாதவர்கள் எல்லாருக்கும் நல்லதை செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். எதாவது குறை இருந்தால் எழுதி கொடுங்கள்” என சத்தம் போட்டார்.
இப்படியாக ஆங்காங்கே அரசு தரும் உரிமைகள், திட்டங்களை போனால் போகிறது என உதவி செய்வதை போல அவர் பேசும் மனப்பான்மைக்கு திமுகவிற்குள்ளேயே கண்டன குரல்கள் ஒலிக்காமல் இல்லை. அதெல்லாம் முதல்வர் காதுக்கு சென்றபோது பொன்முடியின்ன் உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை பறித்த மு.க.ஸ்டாலின், அவருக்கு வனத்துறை அமைச்சர் பதவியை ஒதுக்கினார்.
ஆனாலும் பொன்முடியின் சர்ச்சை பேச்சுகளுக்கு குறைவில்லை. ஒருமுறை மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாமில் அவர் கலந்து கொண்டபோது, பெண் ஒருவர் காய்கறி விலைவாசி குறித்து கேள்வி எழுப்ப ஆத்திரமடைந்து அவரை ஒருமையில் பேசினார் பொன்முடி.
இப்படியாகதான் கடந்த 6ம் தேதி நடந்த திமுக கூட்டத்தில் பெண்களை இழிவுப்படுத்தியும், சைவ, வைணவ மதங்களை அவமதித்தும் வார்த்தைகளை கொட்டியுள்ளார் பொன்முடி. இந்த விவகாரத்தில் இந்த முறை திமுக எம்.பியும், முதல்வரின் சகோதரியுமான கனிமொழியே கடும் கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு சென்றது விவகாரம். அதனால் அவரது துணை பொதுச்செயலாளர் பதவியே பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடியின் இந்த பேச்சுக்கு பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களில் திமுக அளித்த திட்டங்கள், அடுத்த ஒரு ஆண்டில் நிறைவேற்ற போகும் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க திமுக ஐடி விங் முதற்கொண்டு கடுமையாய் பணியாற்றி வரும் நிலையில், பொன்முடி போன்ற ஒரு சிலரின் பேச்சு அப்படியே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதாக திமுகவில் சிலரே புலம்புவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K