அருணாச்சல பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
இந்தியா – சீனா இடையே கடந்த பல காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லடாக் எல்லையில் இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபமாக இந்திய – சீன எல்லையில் குடியிருப்புகளையும் சீனா ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 5 மலைகள், 2 குடியிருப்பு பகுதிகள், 2 நிலவெளிகள் மற்றும் 2 ஆறுகள் அடங்கிய 11 பகுதிகளுக்கு திபெத்திய மொழியில் பெயர் சூட்டி அதை தெற்கு திபெத் என பெயர் சூட்டியுள்ளது சீனா. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அருணாச்சல பிரதேசம் என்றுமே இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், சீனா இதுபோல இந்திய பகுதிகளுக்கு பெயர் மாற்றி பரபரப்பை ஏற்படுத்துவது இது முதல்முறை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.