கடந்த 2023ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு நடைபெற்ற போது, மதுரை பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது முதல் பக்கத்தை அகற்றி, வேறு விடைத்தாளுடன் இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெற கூடாது என்பதற்காக புதிய நடைமுறை கடைபிடிக்கப்பட உள்ளது.
அதன்படி மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும் முதல் பக்கத்தை இதுவரை தலைமை ஆசிரியர்களே இணைத்து வந்தனர். ஆனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வில், தேர்வுகள் இயக்கத்தின் கண்காணிப்பில் நேரடியாக விடைத்தாளின் முதல் பக்கம் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இந்த ஆண்டு முதல், அனைத்து பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு, முதல் பக்கத்தை அகற்ற முடியாத வகையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் இனிமேல் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட முடியாது என்றும் கூறப்படுகிறது.