சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு ரயில்வே பணி அளிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிகாலி பகுதியில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் ராஜேந்திர குமார். கடந்த ஆண்டு ராஜேந்திர குமாருக்கு திருமணமான நிலையில் 10 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் ராஜேந்திர குமார் தனது மனைவியுடன் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவருமே உயிரிழந்தனர்.
பொதுவாக ரயில்வே பணியில் உள்ள யாரேனும் உயிரிழந்தால் அவரது வாரிசுகளுக்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ராஜேந்திர குமாரின் 10 மாத பெண் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ள ரயில்வே, அவருக்கு ரயில்வே அரசு பணியையும் வழங்கியுள்ளது. இதற்காக குழந்தையின் கைரேகை எடுக்கப்பட்டு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
குழந்தை 18 வயதை பூர்த்தி செய்த பின் அவருக்கு ரயில்வேயில் பணி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ரயில்வேயில் 10 மாத குழந்தைக்கு பணி வழங்குவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.