சென்னை முதல் குமரி வரை பயணிகள் கப்பல். மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (05:03 IST)
தமிழக நகரங்களுக்கு இடையே இதுவரை பயணிகள் கப்பல் இல்லாத நிலையில் முதன்முதலாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பயணிகள் கப்பல் ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் இதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளர்.



 


சென்னை அருகே உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், 1,270 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, புதிய கன்டெய்னர் முனையமும், 151 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, பல சரக்கு முனையயத்தையும் திறந்த வைத்த, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதன் பின்னர் கூறியதாவது: திருவனந்தபுரம் - குமரி - சென்னை இடையே, பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்காக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயார்; தமிழக அரசு குறைந்தபட்ச முதலீடு செய்தால் போதும்' என்று கூறினார்.

இதே விழாவில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் இதற்கு பதிலளித்தபோது, 'மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தரும். பயணிகள் கப்பல் திட்டத்திற்கும் கண்டிப்பாக தமிழக அரசு ஒத்துழைக்கும் என்று கூறினார். எனவே சென்னை மக்கள் குமரி செல்ல இன்னும் சில மாதங்களில் கப்பலையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்