பிரதமர் மோடி நேற்று ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறாந்து வைத்து பேசியபோது, தமிழகத்திற்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறினார். ஆனால் நிதி ஒதுக்கீடு வருடத்துக்கு வருடம் அதிகரிக்கும் என்பது பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கே தெரியும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:
முதலாம் ஆண்டு படிக்கும் பொருளாதார மாணவ, மாணவியருக்கு கூட தெரியும் ஆண்டாண்டு காலமாக இதுதான் நடைமுறை என்பது. ஆண்டுக்கு ஒரு முறை எல்லாத் துறைக்குமான நிதி அதிகரிக்கும் என்பது முதல் ஆண்டு படிக்கும் பொருளாதாரம் மாணவர்களுக்கு கூட தெரியும் என்று பிரதமரை விமர்சிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை என்றும் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வெறும் திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள் என்றும் கேலி பேசும் உங்கள் கூட்டணியின் முதல்வர், துணை முதல்வர், தமிழக அமைச்சர்களுக்கும் பதில் அளிக்கும் விதமாகத்தான் நேற்றைய மேடையிலே தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் சொன்ன விளக்கத்தை ஏற்க பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குளுகுளு ஊட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே தரவில்லை என்று அங்கே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அதே நேரத்திலே இங்கே ரூ.8000 கோடிக்கு அதிகமான மக்கள் நலத் திட்டங்களையும் சாலை விரிவாக்கத் திட்டங்களையும் ராமேஸ்வரத்தில் அர்ப்பணித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. உண்மையை சொன்னால் அல்வா கூட கசக்கிறது. ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா? அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.
அதை விடுத்து தி.மு.க. செய்யும் விமர்சனத்திற்கு சிதம்பரம் போன்றவர்கள் வக்காலத்து வாங்குவது ஏதோ அறிவாலயத்தின் வாசலில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் சில எம்.பி. சீட்டுக்களை பெறுவதற்கு தான் என்பதை மக்கள் உணர்வார்கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.",