காஷ்மீரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் காஷ்மீரில் மருத்துவக்கல்லூரி விடுதியில் கிரிக்கெட் பார்த்த மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியுள்ள காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா “மெகபூபா முப்தி தலீபானிய எண்ணங்களுடன் உள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக சிறையில் தள்ளப்படுவார்கள்” என்று பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.