காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

Mahendran

சனி, 29 மார்ச் 2025 (15:45 IST)
தேனி அருகிலுள்ள உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, இன்று   காவல் துறையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
 
கஞ்சா வியாபாரியாக அறியப்படும் பொன்வண்டு எனும் நபர், தனது வீட்டில் மறைந்திருந்தபோது, அவரை கைது செய்ய முயன்ற காவலர்களிடமிருந்து தப்பிக்க, அவர்களை தாக்கிவிட்டு ஓட முயன்றார். இந்த சூழலில், காவல் துறை அதிகாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அவர் உயிரிழந்தார். 
 
என்கவுண்டரில் கொல்லப்பட்ட பொன்வண்டு, சில நாட்களுக்கு முன்பு காவலர் முத்துக்குமாரை தாக்கி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். உசிலம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த முத்துக்குமார் என்ற காவலர் பணி முடிந்தபின், முத்தையன்பட்டியில் உள்ள மதுக்கடை அருகே தனது நண்பர் ராஜாராமுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருந்த மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறு, மோசமான நிலைக்கு சென்று, முத்துக்குமாரை அவர்கள் தாக்கியதில், அவர் தரையில் விழுந்தார். அதன்பின், அவர்களை சேர்ந்த ஒருவர் அருகிலிருந்த கல்லை எடுத்து அவரை  தாக்கினார்.
 
இதனைத் தடுக்க முயன்ற ராஜாராமும் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறை, இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால், பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், முத்துக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இந்த வழக்கின் விசாரணையில் பொன்வண்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து காவலர் முத்துக்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பொன்வண்டு இன்று தப்பி செல்லும் போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்