அரவிந்த் கெஜ்ரிவால் புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் எங்கள் முதல்வர் தங்க மாட்டார் என பாஜக அறிவித்துள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அடுத்த முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வராக பதவி ஏற்பவர் கெஜ்ரிவால் புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் தங்க மாட்டார் என பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், பாஜக தலைமையிலான அரசு இந்த சொத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யும் என்றும், ஆடம்பர மாளிகையை விரிவுபடுத்தும் போது அத்துடன் இணைக்கப்பட்ட நான்கு இடங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சில பாஜக எம்எல்ஏக்களும் இது குறித்து கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது 10,000 சதுர அடியாக இருந்த முதல்வர் இல்லம், 50,000 சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டு ஆடம்பரமாக கட்டப்பட்டது. சட்டவிரோதமாக விரிவுபடுத்தப்பட்டது முதல்வர் இல்லம் என்று விரிவுபடுத்தப்படும் போதே பாஜக குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.