மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை என்று அம்மாநில முதலமைச்சர் அதிரடியாக உத்தரவு பரப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சி படிப்படியாக நடந்து வரும் நிலையில் முதல் கட்டமாக 17 ஆன்மிக நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் நரசிங்கபூர் என்ற மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆன்மிக நகரங்களின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாகவும், ராமர், கிருஷ்ணர் கோவில்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மதுபானம் தடை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இனி வரும் காலங்களிலும் இதே போன்ற நடவடிக்கை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.