பத்மாவத் திரைவிமர்சனம்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (04:33 IST)
தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

வேட்டைக்கு செல்லும் ராஜபுத்திர மன்னன், தீபிகாவை கண்டதும் காதல் கொள்கிறார். அவரை திருமணம் செய்து அரசியாக்கிய நிலையில் அரசருக்கு துரோகம் செய்த ராஜகுருவை நாடு கடுத்த ஆலோசனை கூறுகிறார் தீபிகா(பத்மாவதி) தீபிகாவின் ஆலோசனையின்படி நாடு கடத்தப்படும் ராஜகுரு நேராக டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியிடம் சென்று பத்மாவதியின் பேரழகை விவரித்து, நீங்கள் அவரை அடைந்தால் இந்த உலகையே வெல்லும் அதிர்ஷ்டம் இருப்பதாக கூறி காமத்தீயை ஏற்றிவிடுகிறார்.

விதவிதமான பெண்களை அனுபவிக்கும் வழக்கம் கொண்ட அலாவுதீனுக்கு பத்மாவதியையும் அடைய வேண்டும் என்ற மோகம் ஏற்படுகிறது. எனவே ராஜபுத்திர அரசு மீது போர் தொடுத்து அந்நாட்டு அரசனை நயவஞ்சகமாக கடத்தி வந்து, பத்மாவதி நேரில் வந்தால் அரசரை விடுவிப்பதாக நிபந்தனை விதிக்கின்றார். இந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளும் பத்மாவதி டெல்லி செல்கிறார். அவர் கணவரை மீட்டாரா? அலாவுதீனின் ஆசை நிறைவேறியதா? அரசர் விடுவிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் தான் மீதிக்கதை

தீபிகா படுகோனேவை முன்னிறுத்தியே இந்த படத்தின் கதை நகர்கிறது. பக்கம் பக்கமாய் வசனம் பேசாமல் கண்களில் மட்டுமே வசனம் பேசுகிறார். ஒரே பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் தெரிகிறது. அரச குடும்பத்து பெண்களுக்கே உரிய மிடுக்கு, சிக்கலான நேரங்களில் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவு, கிளைமாக்ஸில் உருக வைக்கும் அவரது நடிப்பு என தீபிகா படுகோனேவின் நடிப்பு மிகச்சிறப்பாக உள்ளது.

அலாவுதின் கில்ஜியாகவே வாழ்ந்துள்ளார் ரன்வீர்சிங். எவ்வளவு பெரிய ராஜ்ஜியமாக இருந்தாலும் மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டால் சரியும் என்பதற்கு உதாரணமாய் இந்த கேரக்டர். தீபிகாவுடன் இவருக்கு நேருக்கு நேர் ஒரு காட்சி கூட இல்லை என்றாலும் படம் முழுவதும் இவர் தீபிகாவை நினைத்தே அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பது படத்தின் திரைக்கதையின் சுவாரஸ்யம்

ராஜபுத்திர அரசனுக்கே உள்ள மிடுக்கை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஷாஹித் கபூர். போருக்கு செல்லும்போது பத்மாவதியை பார்க்கும் ஒரு பார்வை போதும் இவரது நடிப்பை சொல்ல. காதல், சோகம், வீரம் என இவரது கேரக்டர் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக உள்ளது.

சஞ்சய்லீலா பன்சாலியின் திரைக்கதையில் முதல்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாவது பாதி ஜெட்வேகம். ஒரு சரித்திர படத்தில் இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் கச்சிதமான திரைக்கதையில் புகுத்தியுள்ளார். காட்சி அமைப்புகளிலும் பிரமாண்டத்தை காட்டியுள்ள சஞ்சய்லீலா, போர்க்காட்சிகளில் மட்டும் ஏமாற்றம் கொடுத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் உள்ள போர்க்காட்சிகளை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறது.

ராணி பத்மாவதியை தவறாக சித்தரிப்பதாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரகள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்பது உறுதி. பத்மாவதியை அந்த அளவுக்கு பெருமைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, காஸ்ட்யூம் டிசைன், செட்டிங்ஸ், மற்றும் 3D டெக்னாலஜி என அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் நேர்த்தியான பணியை செய்துள்ளனர். படத்தின் நீளத்தை மட்டும் எடிட்டர் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் 'பத்மாவத்' இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு சிறப்பான சரித்திரம்

3.5/5

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்