ஆ.ராசா VS எல்.முருகன்..! ரேசில் அதிமுக..! நீலகிரி தொகுதி யாருக்கு.? கள நிலவரம் என்ன.?

Senthil Velan
வியாழன், 11 ஏப்ரல் 2024 (12:11 IST)
2024 மக்களவைத் தேர்தலில் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள நீலகிரி தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்.? தேர்தல் பந்தயத்தில் திமுக, பாஜக, அதிமுக வேட்பாளர்கள் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்..
 
நீலகிரி மக்களவைத் தொகுதியில்  பவானிசாகர்,  உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இது பட்டியல் பிரிவினருக்கான ரிசர்வ் தொகுதியாகவும்.
 
காங்கிரஸ் ஆதிக்கம்:
 
1957 ஆம் ஆண்டு நீலகிரி தொகுதி உருவாக்கப்பட்டது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம். ஏழு முறை அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. 1967-ல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வென்றிருக்கின்றன. இரு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு ஐந்து முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.
 
மலைப்பகுதியையும், சமவெளி பகுதியையும் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. மலைப்பகுதிகளில் 40 சதவீத பேரும், சமவெளி பகுதிகளில் 60% பெரும் வசிக்கின்றனர். இத்தொகுதியில் அதிகளவு பட்டியல் இனத்தவர்களாக உள்ளனர். சுமார் 24 சதவீதம் பேர் பட்டியல் இனத்தவர்களும், தல ஏழு சதவீதம் பேர் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் உள்ளனர். படுகர்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் சுமார் 2.5 சதவீதம் பேர் உள்ளனர். மேலும் இந்த தொகுதியில் இலங்கைத் தமிழர்களும் வசித்து வருகின்றனர்.
 
மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்:
 
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம். விவசாயிகளில் 50% பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறு, குறு விவசாயிகளும் இங்கு உள்ளனர். அங்குள்ள இளைஞர்களில் 80% பேர் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். மலை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலை பொறுத்தவரை ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே வருமானம் கிடைக்கும்.
 
சுற்றுலா மேம்பாடு, அடிப்படை வசதிகள், சாலைப்போக்குவரத்து, மின்சாரம், வேலைவாய்ப்பு போன்றவை நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் ஆகும். தனியார் வன பாதுகாப்புச் சட்டம் போன்றவை அங்குள்ள மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. அரசு பொறியியல் கல்லூரி இல்லை. மேட்டுப்பாளையம், பவானிசாகரில் போதிய நீர் பாசன வசதிகள் இல்லை. அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வராத நிலையில், குடிநீர்த் தட்டுப்பாடு மக்களை வதைக்கிறது.
 
அவிநாசி தொகுதியில் நெசவுத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகப் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 ஆதார விலை வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை.
 
மாற்றுத் தொழிலாக அரசு முன்வைத்த மலர் சாகுபடித் தொழிலுக்கு, ஏற்றுமதி மையம், பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும். உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை வட மாநிலத்துக்கு இடமாற்றும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
 
மொத்த வாக்காளர்கள்..?
 
நீலகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,18,915


ஆண் வாக்காளர்கள் -  6,83,021
பெண் வாக்காளர்கள் - 7,35,797
மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 97
 
நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிக முறை வென்றுள்ளனர்.  வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சமவெளிப்பகுதி இருப்பதால், வெளியூர் வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். வெற்றிவாய்ப்பும் அவர்களுக்கே கிடைக்கிறது.
 
2019 தேர்தல் நிலவரம்:
 
2019 மக்களவை தேர்தலில் திமுகவின் ஆ.ராசா 5,47,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 3,42,009 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
 
2024 தற்போது நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் ஆ.ராசா நான்காவது முறையாக களமிறங்கி உள்ளார். பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார்.
 
ஆ.ராசா (திமுக):
 
நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.  இருப்பினும் நீலகிரி தொகுதியை தனது சொந்த தொகுதியாக மாற்றி வைத்துள்ளார். தொகுதி மக்களிடையே அவர் நன்கு அறிமுகமானவர்.  உதகை மற்றும் குன்னூர் பேரவை தொகுதி பகுதிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என திமுகவினர் தெரிவிக்கின்றனர். பவானிசாகரிலும் திமுகவின் கை ஓங்கியுள்ளது. இதனால் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பலமான போட்டியாளராக ஆ.ராசா பார்க்கப்படுகிறார். 
 
எல்.முருகன் (பாஜக):
 
பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு எல்.முருகன் புதியவர். நாமக்கல்லைச் சேர்ந்த இவர், அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்.  இவர், கடந்த ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். பிரதமர் மோடியிடம் எல்.முருகனுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக பாஜகவினர் உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
 
படுகர் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். இவற்றோடு அதிருப்தி வாக்குகளும் தங்களுக்கு வரும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர். 
 
லோகேஷ் தமிழ்ச் செல்வன் (அதிமுக):
 
அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு சட்டசபை முன்னாள் சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தனபால் மகன்தான் லோகேஷ் தமிழ்ச் செல்வன். நீலகிரி தொகுதியில் லோகேஷ் தமிழ்ச் செல்வனுக்கு, அதிமுகவினரே சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனை அவரது தந்தையே கூறியிருக்கிறார். இருப்பினும் இரட்டை இலை சின்னத்திற்கான வாக்குகள் அங்கு கணிசமாக உள்ளதால் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு உறுதியாகும் என்பது கேள்விக்குறிதான்.
 
தற்போதைய நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவுக்கும், பாஜகவின் எல்.முருகனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் நீலகிரி தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்