முதல்வர் வாகனம் மீது செருப்பு வீச்சு – பிரச்சாரத்தில் பரபரப்பு !

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (07:32 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் காரின் மீது செருப்பு வீச்சு நடந்துள்ள சம்பவம் அரசியலில் பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.

தேர்தல் களம் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் சில பகுதிகள் தவிர்த்து மற்றப் பகுதிகளில் மக்கள் வரவேற்பு இல்லாத சூழல் உள்ளது.

இதையடுத்து பிரச்சாரத்தின் ஒருப்பகுதியாக நேற்று அவர் தஞ்சாவூர் தொகுதி த.மா.க வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.இரவு 9 மணியளவில் தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வேனில் முதல்வர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் காரில் அவரின் பின்புறம் செருப்பு ஒன்று விழுந்துள்ளது. அவரைக் குறிப்பார்த்து வீசப்பட்ட அந்த செருப்பு அவர் மேல் படாமல் காரில் விழுந்துள்ளது.

செருப்பு வீசிய மர்மநபர் யார் என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. அதுகுறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை செய்து வருகிறது. முதல்வர் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து கிளம்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்