மாணவர்கள் போராட்டம் கலரத்தில் முடிந்தது வேதனை - ராகவா லாரன்ஸ் உருக்கம்

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (21:05 IST)
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றினைந்து கடந்த 15ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.      


 

 
இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.  சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.    
 
போரட்டத்தின் முக்கிய களமாக திகழ்ந்த சென்னை மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக கூடியிருந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களில், பெரும்பாலானோர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நேற்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.  ஆனால், சிலர் அங்கிருந்தாவறே போராட்டத்தை தொடர்ந்தனர்.  தமிழக அரசு அவசர சட்டம் முழுமையாக நிறைவேறிய நிலையில் அவர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராகவாலாரன்ஸ் “ மாணவர்கள் நடத்திய போராட்டம் 7 நாட்கள் அமைதியாகவே நடந்தது. அதன் பின்பு தமிழக அரசு அவசர சட்டத்தையும் நிறைவேற்றியது. ஆளுநர் கையெழுத்து இட்டதும் நாம் போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என கூறிவிட்டு, நான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன். 
 
ஆனால், அடுத்த நாள் அதிகாலை கடற்கரையில் போலீசார் தடியடி நடத்துவது கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே மெரினாவிற்கு சென்று மாணவர்களிடம் பேச நினைத்தேன். ஆனால், போலீசார் என்னை அனுமதிக்கவில்லை. அதன் பின் உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி, உள்ளே சென்று, நாம் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் எனக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினேன். 
 
ஆனால் சம்பந்தம் இல்லாத சிலர் என்னை பேசவிடாமல் எதிர்த்தனர். நான் அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தவன் என குற்றம் சுமத்தினர். மாணவர்களின் போராட்டத்தில் சில அமைப்புகள் ஊடுருவியுள்ளனர் என்பதை நான் புரிந்துகொண்டேன். 
 
கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறிவிட்டது. மாணவர்கள் சரித்திரம் படைத்துவிட்டனர். ஆனால், அதை கொண்டாட முடியாமல், கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்?. 
 
கலவரத்து யார் காரணம் என்பது மர்மமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு தடை நீங்க காரணமாக இருந்த முதல்வர் மற்றும் பிரதமருக்கு நன்றி. மாணவர்கள் போராட்டம் வெற்றி அடைந்தததை முன்னிட்டு, அடுத்த மாதம் விழா நடத்துவோம். அதில் அனைவரையும் பாராட்டுவோம். போராட்டத்தின் போது முதல்வரையோ, பிரதமரையோ யாராவது தவறாக பேசியிருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். கைது செய்தவர்களை போலீசார் விடுதலை செய்ய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்