சத்ய நாராயண பூஜை செய்வதற்கு முன்னதாக பெளர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கணவன்- மனைவி இருவரும் சந்திரன் உதயமாகும் முன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
கோலமிட்டு அதன்மீது மூன்று வாழை இலைகளை வைக்கவேண்டும். வாழை இலையின் மீது அரிசியை பரப்ப வேண்டும். வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றி அரிசியின் மேல் வைக்க வேண்டும்.
ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீரை கலசத்தில் நிரப்ப வேண்டும். கலசத்தின் உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இட வேண்டும்.
மஞ்சள்பொடியை தண்ணீரில் குழைத்து தேங்காயின் மீது தூவி கலசத்தின் மீது வைக்க வேண்டும். இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாத்த வேண்டும். பிறகு சத்யநாராயணர் படத்தை பூக்களால் அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.
தொண்ணையிலான 9 கிண்ணங்களில் நவ தானியங்கள் நிரப்பி அவற்றை நவக்கிரகங்களுக்காக பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை, சங்கல்பம் நவக்கிரக பூஜை அஷ்ட திக் பாலக் பூஜை முதலியவற்றை செய்து அதன் பிறகு கலச பூஜை வருண பூஜை பின் சத்யநாராயண பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்ரீ சத்யநாராயண அஷ்டோத்திர சத்நாமாவளியை உச்சரிக்க வேண்டும்.
ஸ்ரீசூக்தம் நாராயண சூக்தம் பிரம்ம சூக்தம் துர்கா சூக்தம் புருஷ சூக்தம் விஷ்ணு சூக்தம் பாக்யா சூக்தம் நாராயண உபநிஷத் விஷ்ணு சஹஸ்ரநாமம் ருத்ரம் சமகம் சொல்வது மேலும் அளவில்லாத பலனை தரும்.
பின்னர் தூபம், தீபம், நிவேதனம், கற்பூரதீபம் முதலிய வற்றை காட்டி கதை படிக்கவும் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். கண்டிப்பாக ப்ரசாதம் சாப்பிட வேண்டும். பூஜை முடிந்ததும் ஸத் ப்ராம்மணர்களுக்கு தான, தர்மங்கள் செய்வது இன்னும் அதிக பலனை கொடுக்கும்.