திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.
பூலோக வைகுண்டம் என ஆன்மிக பெரியோர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஒன்றாகும். ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடங்குகிறது. இன்று மாலை திருநெடுந்தாண்டகம் சொல்லி விழா தொடங்கப்படும். தொடர்ந்து நாளை பகல்பத்து நிகழ்வு தொடங்குகிறது. நாளை காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபம் வந்தடைகிறார். அங்கு அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடுவர்.
இரவு 7 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் காட்சி தரும் நம் பெருமாள் இரவு 9.45 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.
வைகுண்ட ஏகாதசி விழாவில் சிகர நிகழ்வாக 16ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19ம் தேதி தீர்த்தவாரி கண்டு அருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றும், 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு காண்கிறது.
Edit by Prasanth.K