“நாங்கள் நினைத்ததை விட குறைவான இலக்குதான்…” சென்னைக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஷுப்மன் கில்!

vinoth
சனி, 11 மே 2024 (08:01 IST)
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 59 ஆவது லீக் போட்டியில் சி எஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும், ஷுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் சேர்த்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தனர்.

இதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணியால் 196 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் குஜராத் அணி சி எஸ்கேவை 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் சதமடித்த குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது பேசிய அவர் “இந்த போட்டியில் பேட் செய்யும் போது நாங்கள் என்ன இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது. கடந்த ஆண்டு கூட சாய் சுதர்சனோடு அதிக நேரம் பேட் செய்தேன். அவருடன் விளையாடுவது மகிழ்ச்சியானது. நாங்கள் சென்ற வேகத்துக்கு ஒரு கட்டத்தில் 250 ரன்கள் சேர்க்கலாம் என நினைத்தேன். ஆனால் கடைசி மூன்று ஓவர்கள் எங்களால் சிறப்பாக விளையாட முடியாததால் குறைவான இலக்கையே நிர்ணயிக்க முடிந்தது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்