ஐபிஎல் 2024 சீசனில் இன்றைய பிற்பகல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ அணியும் மோதிக் கொண்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் வெற்றியை பெற்றது.
முதலில் பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க விரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், ஜாஸ் பட்லர் 11 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
ஆனால் அடுத்து களமிறங்கிய அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து 82 ரன்களை குவித்தார். இதனால் அணியின் ரன்கள் அதிகரித்தது. 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்களை குவித்து லக்னோவுக்கு 194 ரன்களை இலக்காக வைத்தது.
பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய லக்னோ அணி ஆரம்பமே சறுக்கலை காண ஆரம்பித்தது. முதல் ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் டி காக் 4 ரன்களில் அவுட் ஆக, அடுத்து தேவ்தத் படிக்கலும் 2 வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலேயே பதோனியும் விக்கெட்டை இழக்க தடுமாறிய அணியை கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடி அரைசதம் வீழ்த்தி வெற்றியை நோக்கி வழி நடத்தினார். அவருடன் நிக்கோலஸ் பூரனும் 64 ரன்கள் வரை குவித்து அணியின் வெற்றிக்காக முயற்சித்தார்.
ஆனால் கே.எல்.ராகுல் 17 வது ஓவரில் விக்கெட்டை இழந்துவிட ஓவர்களும் முடிந்ததால் இலக்கை எட்ட முடியாமல் லக்னோ அணி தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும்போதே வரிசையாக விக்கெட்டுகள் விழுந்திருந்த போதிலும் நிதானமாக நின்று விளையாடி அணியின் ரன்களை உயர்த்திய கேப்டன் சஞ்சு சாம்சன் ப்ளேயர் ஆப் தி மேட்ச்சை வென்றார்.