மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் நடனம்.! முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது வழக்குப்பதிவு..!

Senthil Velan
திங்கள், 15 ஜூலை 2024 (20:52 IST)
மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் நடனம் ஆடியதாக கூறி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்பட "தோபா, தோபா" என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். 

தாங்கள் மிகவும் சோர்வுற்று இருப்பதாகவும், உடலில் பல இடங்களில் வலி இருப்பதாகவும் சுட்டிக்காட்டுவதற்காக  கால்களை இழுத்து, இழுத்து அவர்கள் நடனமாடியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவர்கள் நடனம் ஆடி இருப்பதாக மாற்று திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய பாராலிம்பிக் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளன. 

மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் இருக்கும் அந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதில் இடம் பெற்ற முன்னாள் வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பை நடத்தி வரும் அர்மான் அலி என்பவர் டில்லி லஜபத் நகரில் உள்ள அமர்காலணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி.! சென்னையில் 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது..!!

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்